சுதந்திர மலேசியாவின் வரலாற்றில் முதன் முறையாக கடந்த 2018ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இதையடுத்து ஆட்சிப் பொறுப்பேற்றவர்கள் புதிய மலேசியாவை உருவாக்குவோம் என்றனர்.
ஆனால் அண்மைய நிகழ்வுகளைக் காணும்போது அங்கு புதிய ஆட்சியை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தான் தொடங்கி உள்ளனவோ? எனும் சந்தேகம் எழுவதாக மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாளை மலேசியாவின் மாமன்னரை (அகோங்) நேரில் சந்திக்க பிரதமர் மகாதீர் நேரம் கேட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. எதற்காக இந்தச் சந்திப்பு என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. எனினும் புதிய ஆட்சி அமைப்பது குறித்து மாமன்னரிடம் விளக்கம் அளிக்கவே பிரதமர் மகாதீர் நேரம் கேட்டிருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆங்காங்கே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்கள்
பிப்ரவரி 23 ஞாயிற்றுக்கிழமை மலேசிய நேரப்படி மாலை 3.30 மணியளவில் இந்தக் கட்டுரை தயாராகும் வேளையில்... மலேசியாவின் ஆளும் பக்காத்தான் ஹராப்பானின் உறுப்புக் கட்சிகள், எதிரணியான தேசிய முன்னணியின் (பாரிசான் நேஷனல்) உறுப்புக் கட்சிகள், அன்வாருக்கு எதிராக மாறிவிட்டதாகக் கருதப்படும், அவரது பிகேஆர் கட்சியின் துணைத் தலைவரும், மலேசியப் பொருளாதார அமைச்சருமான அஸ்மின் அலி தலைமையில் அதிருப்தியாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஆங்காங்கே தீவிர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.